திங்கள், 23 பிப்ரவரி, 2015

மேல ஏறி வாறோம்..நீ ஒதுங்கிநில்லு!!-WC2015

பிப்ரவரி.15 2015!! ஒட்டுமொத்தமொத்த இந்தியாவும் உச்சபட்ச வெப்பநிலையில் தகித்து கொண்டிருந்தது.ஞாயிறு விடுமுறையில் கூட நெரிசலில் சிக்கி தவிக்கும் பெருநகரத்து சாலைகள் எல்லாம் ஆள் அரவமின்றி வெறிச்' என்றிருந்தன.இவையனைத்துக்கும் காராணம்,அங்காளி பங்காளிகளான இந்தியாவும் பாகிஸ்தானும் உலககோப்பை 2015 முதல் லீக் போட்டியில் நேருக்கு நேர் மோதவிருந்த்து தான்!வரலாற்றை எப்படியாவது மாற்றி எழுதிவிடும் முனைப்புடன் பாகிஸ்தானும்..இதுவரையிலான வெற்றி சரித்திரத்தை தக்கவைத்துக்கொள்ளும் நோக்குடன் இந்தியாவும் களம் காண தயாராயின.எரியும் நெருப்பில் எண்ணெய் ஊற்றுவது போல ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் 'பட்டாசு வெடிக்க காத்திருக்கும்' விளம்பரத்தை வெளியிட..பற்றிக்கொண்டது இருநாட்டு ரசிகர் படையும்!


முதல்போட்டியில் இந்தியா களம் காணும் வரையில்,அதிதீவிர இந்திய ரசிகர்களுக்கும் கூட உள்ளூர கடுஞ்ஜுரம் அடித்துகொண்டிருந்தது என்பதுதான் நிதர்சனம்.காரணம்,இந்திய அணிக்கு கொடுக்கபட்டிருந்த அழுத்தமும்..உலககோப்பைக்கு முன்னாலான இருமாதங்கள் இந்திய அணிக்கு 'சத்தியசோதனை' காலமாய் அமைந்ததும் தான்!அதோடு உலககோப்பைக்காக தெரிவு செய்யப்பட்ட டீம் ஸ்குவாடை பார்க்கையிலேயே தெரிந்திருக்கும்..இது வழமையான இந்திய அணியில் இடம்பெறும் எதிரணியை மிரட்டக்கூடிய ஜாம்பாவான்கள் அதிகம் இல்லாத வீரர்களை கொண்ட ஒரு பட்டியல் என்று.இவையெல்லாம் ஒன்று சேர்ந்ததாலோ என்னவோ,ஜெயிச்சா சந்தோசம்..இல்லைனா..ரொம்ப மோசமா தோக்காம இருந்தாக்கூட ஓகே என்ற நிலைக்கு சராசரி இந்திய கிரிக்கெட் ரசிகன் தள்ளப்பட்டிருந்தான்!

நிலைமை இப்படி இருக்க அன்று களத்தில் நடந்தததோ வேறு!இந்தியாவை பார்த்து தப்புக்கணக்கு போட்டவர்களுக்கு அன்றைய ஆட்டம் "சிங்கம் இதுவரை சற்றே இளைப்பாறியது..அந்த இளைப்பாறல் நிரந்தரமானது அல்ல" என்பதை உணர்த்துவது போலான ஒரு ஆட்டம்.நாற்ப்பதைந்தாவது ஓவர் வரை கட்டுகோப்பான மிக நேர்த்தியானதொரு ஆட்டம்..பேட்டிங்,களத்தடுப்பு,மிகவும் மோசமானதாக பார்க்கப்பட்ட பந்துவீச்சு துறை அதன் மிக சிறப்பானதொரு பங்களிப்பை கொடுத்தது என நிறைவாக இருந்தது அணியின் செயல்பாடு..ஒன்றைத்தவிர,அது 45வது ஓவருக்கு பின் மடமடவென விக்கெட் சரியாமல் இருந்திருந்தால் அணியின் ஸ்கோர் அனாயசமாக 325ஐ தொட்டிருக்கும்.. 

இந்த வெற்றி ரசிகர்களுக்கு நம்பிக்கையை கொடுத்ததோ இல்லையோ நிச்சயம்ஒட்டுமொத்த அணிவீரர்களுக்கும் அளவிலா உற்சாகத்தையும்,நம்பிக்கையும் கொடுத்திருக்கும்.அதிமுக்கியமான ஒரு தொடரின் துவக்கம் இதைவிட வேறெப்படி சிறப்பாய் இருந்துவிட முடியும்?!போட்டிக்கு பின்னான பாராட்டு மழையில் ஒட்டுமொத்த இந்திய அணியும் நனைந்து கொண்டிருக்கையில்,கொண்டாடுவதற்கு இப்போது நேரமில்லை..கொண்டாடும் அளவிற்கு இன்னும் எதையும் நாங்கள் சாதித்துவிடவில்லை என்றார் தோனி..அதுதான் தோனி..அதனால் தான் அவர் தோனி! :)

பாகிஸ்தானுடனான வெற்றிக்கு பின்..இந்திய அணியின் ஹேட்டர்ஸ்களின் குரல் இப்போது இப்படி ஒலித்தது.அதாகப்பட்டது,'பாகிஸ்தான் ஒன்னும் அவ்ளோ ஸ்ட்ராங்கான டீம் இல்ல,அடுத்த மேட்ச் சவுத் ஆப்ரிக்காவோட..அதுல எப்படி பெர்பாமன்ஸ் பன்றாங்கன்றதை வச்சி தான் எதுவாயிருந்தாலும் சொல்லமுடியும்' என்பதாயிருந்தது!போதாக்குறைக்கு நான் சின்னபையன்னு தானேடா என்மேல கை வச்சிபுட்ட,தைரியமிருந்தா எங்க அண்ணன் மேல கையவச்சி பாருடா என்கிற ரேஞ்சில்,பாகிஸ்தானை ஜெயிச்சிட்டிங்க..முடிஞ்சா சவுத் ஆப்ரிக்காவை ஜெயிங்க என்று சொல்வது போல மீண்டும் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் 'மோக்கா மோக்கா' விளம்பரத்தை வெளியிட்டு சூழலை இன்னும் பரபரப்பாக்கியது.

இந்திய ரசிகர்களுக்குமே கூட,இந்த போட்டியில் இந்தியாவின் செயல்பாடு எப்படி இருக்குமோவென்ற கேள்வியையும்,கலவரத்தையும் ஒருசேர ஏற்படுத்தியிருந்தது.தென்னாப்ரிக்காவை பொறுத்தவரை ABDவில்லியர்ஸ்,ஆம்லா,மில்லர்,டு ப்ளசிஸ் என அதிரடியான பேட்டிங் வரிசை ஒருபுறம்,உலகின் தலைசிறந்த பந்துவீச்சு,களத்தடுப்பில் கில்லி என எந்த பக்கத்திலிருந்து பார்த்தாலும் சவுத் ஆப்ரிக்கா மிக அபாயகரமானதொரு அணியாகவே விளங்கியது.இந்த சூழலை எப்படி கையாளப்போகிறது இந்தியா என்பதுதான் மிகப்பெரிய கேள்வியாய் இருந்தது நேற்றைய ஆட்டத்தில்.

டாஸ் ஜெயித்து முதல் பேட்டிங்கை தோனி தெரிவு செய்ய..முந்தைய ஆட்டத்தைபோலவே இந்த முறையும் ரோஹித் ஏமாற்றினாலும்,தவானும்,ரகானேவும்,கோலியும் ஆடிய ஆட்டம் ஜஸ்ட் அமேசிங்!எத்தனை பெரிய அணியாயிருந்தாலும்..எவ்வளவு மிரட்டலான வீரர்களாயிருந்தாலும்,'எங்களுக்கு பயம்னா என்னனே தெரியாது' என்று சொல்வதாய் இருந்தது அந்த ஆட்டம்..தவான் 137ல் அவுட் ஆக சென்றமுறை பாகிஸ்தானுடன் நடந்த அதே தவறு மீண்டும் நடந்தேறியது..ரன்களை மிக விரைவாக குவிக்கவேன்டியா கடைசி ஐந்து ஓவர்களில் விக்கெட்டுகள் வரிசையாய் விழ 335க்கு மேல் எதிர்பார்த்த அணியின் ஸ்கோர் 307-7 ஐம்பது ஓவர்களுக்கு என்றிருந்தது.

தோனியை பொறுத்துவரை ஒரு விசயத்தில் அவர் மிக தெளிவாய்இருந்தார் என்பது மட்டும் புரிந்தது..இதுதான் நம்ம டீமின் பவுலிங்,இதை வைத்துதான் மொத்த எதிரணியையும் வீழ்த்த வேண்டும்..அதற்கேற்றார் போல் களவியூகம் அமைக்கவேண்டும் என்பதுதான் அது!அதேபோல் இந்தபோட்டியில் தோனியின் துருப்புசீட்டு அஸ்வின்..இக்கட்டான கட்டத்தில் அஸ்வினின் பவுலிங் எதிரணிக்கு இன்னும் அதிக நெருக்கடியை கொடுத்தது.ஆரம்பத்திலிருந்தே அவர்களின் பார்ட்னர்ஷிப்களை சீரான இடைவெளியில் உடைத்து வந்ததே பாதி வெற்றியை இந்தியாவின் பக்கம் கொண்டுவந்து விட்டது.ABDவில்லியர்ஸின் ரன்வுட் தான் ஆட்டத்தின் திருப்புமுனை..ஜடேஜாவின் பந்தை ஏபிடி ஆஃப் சைடில் அடித்து ஆட,மோஹித் அதை மிஸ் ஃபீல்டிங் செய்ததாய் நினைத்து ABDஇரண்டாவது ரன்னுக்கு ஓட,சரியான நேரத்தில் தோனி வசம் பந்து சென்றடைய ஒரு பர்ஃபெக்ட் ரன்அவுட். அதன்பின் அடுக்கப்பட்ட சீட்டுகட்டுகளாய் விக்கெட்கள் விழ ஒரு ஆகச்சிறந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றியை இந்தியா தனதாக்கி கொண்டது.

பங்காளிகளை ஜெயித்தது,ஒரு முன்னணி அணியுடனான அபார வெற்றி இவையெல்லாம் இந்தியாவுக்கு,இந்த உலககோப்பையை நோக்கி செல்வதற்கான வெளிச்ச பாதையை காட்டியிருக்கிறது..

இன்னும் செல்லவேண்டியதூரம் அதிகம் இருக்கின்றது...போலவே பல தடைகளும்!!அதனாலென்ன?? உடைப்பதற்காகதானே தடைகள்!படைப்பதற்காகத்தானே சாதனைகள்!!

  தடை அதை உடை!!!புது சரித்திரம் படை!!கமான் இந்தியா.......கமான்!!! #WEWON'TGIVEITBACK

செவ்வாய், 9 டிசம்பர், 2014

தமிழன் என்ன சோதனை எலியா?-மீத்தேன் பயங்கரம்

தமிழகத்தின் நெற்களஞ்சியம்,சோழநாடு சோறுடைத்து..மாடுகட்டி போரடித்தால் மாளாது என்று யானை கட்டி போரடித்த சோழ நாடு, என்றெல்லாம் பெருமை இப்பூமிக்கு உண்டு.ஆனால் இனியும் இதுபோல மார்த்தட்டி பெருமைபேசிக்கொண்டு இருந்தோமேயானால் தமிழனை போல ஒரு ஈனா வானா வேறு எங்கும் இருக்கமுடியாது என்றுதான் அர்த்தம்...காவேரி டெல்டா பகுதிகளான தஞ்சாவூர்,திருவாரூர் மாவட்டங்கள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதி விவசாயிகள்/மக்களின் ஒட்டுமொத்த வாழ்வும் மயிரிழையில் தொக்கி நிற்கிறது.அவர்களின் வாழ்வாதாரத்தை அழிப்பதற்காகவே ஒரு திட்டத்தை ஆள்பவர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.அதுதான் மீத்தேன் வாயு எடுக்கும் திட்டம்!!


 மன்னார்குடி மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் பூமிக்கு கீழ் நிலக்கரி இருப்பதை மத்திய இயற்கை எரிவாயு மற்றும் பெட்ரோலியத்துறை கண்டறிந்துள்ளது.இந்த நிலக்கரி படிமங்களின் மீது மீத்தேன் எனும் ஒருவித வாயு இருப்பதாகவும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த வாயு எரிபொருளாக உபயோகபடுத்தவல்லது.இந்த மீத்தேன் வாயு எடுக்கும் திட்டத்திற்காக ஹரியானாமாநிலத்தை சேர்ந்த கிரேட் ஈஸ்ட்டர் எனர்ஜி என்ற நிறுவனத்துடன் 2010 ஆம் ஆண்டு அப்போதைய மத்திய அரசு ஒப்பந்தம் செய்தது.இந்த மீத்தேனானது மிக எளிதில் தீப்பற்ற கூடியது என்பதும்,இத்தனை அபாயகரமான வாயுவை எந்த அளவுக்கு எச்சரிக்கை உணர்வோடு கையாள போகிறார்கள் என்பதும் ஒருபக்கம் இருந்தாலும்..


இத்திட்டத்தினால் பூமியின் கீழ் பல்லாயிரம் அடி ஆழத்தில் உள்ள வாயுவை வெளியே எடுக்க இவர்கள் போட போகும் ஆழ்துளை கிணறுகள் தான் ஒட்டுமொத்த தமிழர்களின் வாழ்வையும் சூறையாடப்போகும் எமன்!!

"என்னப்பா பெருசா பில்டப் குடுத்துகிட்டே இருக்க?இந்தியாவுல இப்ப இருக்க எரிபொருள் பஞ்சத்துக்கு..நாமளே ஒரு எரிபொருளை தயாரிக்க முடிஞ்சா நல்லதுதானே?என்ன நாம தண்ணிக்காவ பூமியில போர் போடுற மாதிரி,அவுங்க பூமியில ஆழமா போர் போடபோறாங்க அவ்ளோதானே?"என்று இதுவரை அலட்சியமாய் இதை படித்து வந்தவர்கள் மனதை கொஞ்சம் திடமாக்கி கொள்ளுங்கள்.உங்களுக்காக காத்திருக்கிறது அடுத்தடுத்த அதிர்ச்சிகள்!!

ஆழ்துளை கிணறு மூலம் பூமியின் அடி ஆழத்தில் உள்ள நிலக்கரி படிமங்களுக்கும்,பாறைகளுக்கும் இடையே பரவியுள்ள மீத்தேனை வெளியே எடுக்கப்போகிறார்கள் இதுதான் திட்டம்..கேட்பதற்கு மிக எளிமையாய் இருக்கிறது அல்லவா?!ஆனால் நிதர்சனம் அதுவல்ல.

மீத்தேனை எடுப்பதற்காக சுமார் ஆறாயிரம் அடி ஆழத்திற்கு பூமியில் துளையிட்டு,பின் அதிலிருந்து பல்லாயிரம் மீட்டர் நீளத்திற்கு பக்கவாட்டில் துளையிடப்படும்.ஒரு ஆழ்துளையிலிருந்து பல்வேறு பக்கவாட்டு துளைகள் போடப்படும்.பின் இந்த துளைகள் வழியே வேதிப்பொருட்களை மிக அதிக அழுத்தத்தில் உட்செலுத்தி அடிஆழத்தில் உள்ள பாறைகளில் விரிசல் ஏற்படுத்தப்படும்.இதனால் அந்த பாறைகளின் இடையே சிக்கியிருக்கும் மீத்தேன் வாயுவானது வெளியேறி,மேலிருந்து அனுப்பபட்ட உயர் அழுத்த ரசாயன கலவையோடு கலந்து வெளியே எடுக்கப்படும்.

வெளியே எடுக்கபட்டபின் அந்த ரசாயன கலவையிலிருந்து மீத்தேன் மட்டும் தனியே பிரிக்கப்படும்.இப்படி ஒரு ஆழ்துளை கிணறிலிருந்து மீத்தேனை எடுக்கும் Process-க்கு ஆண்டொன்றிற்கு நானூறு டேங்கர் லாரி அளவிற்கு தண்ணீர் தேவை.ஒரு ஆழ்துளை கிணற்றிற்கு மட்டும் ஐந்து நாட்கள் நடக்கும் இந்த நீரியல் விரிசல் முறைக்கு 5கோடியே 66லட்சம் லிட்டர் தண்ணீர் தேவை.மொத்தம் இரண்டாயிரத்திற்கும் மேல் காவேரி டெல்டாவை சுற்றி ஆழ்துளை கிணறுகள் அமைப்பதாய் திட்டமாம்.அதுமட்டுமில்லாது தொடர்ந்து முப்பது ஆண்டுகளுக்கு இப்பகுதியிலிருந்து மீத்தேனை உறிஞ்சி எடுக்கப்போகிறார்கள்.

இன்னும் எளிமையாய் சொல்வதென்றால் மேட்டூர் அணையின் கொள்ளளவான என்பது டிஎம்சி தண்ணீரை இந்த ஆழ்துளை அரக்கன்கள் நான்கே மாதத்தில் குடித்து தீர்க்குமென்றால் நீங்களே கணக்கு போட்டு கொள்ளுங்கள்.முப்பது வருடத்தில் காவேரி பாய்ந்த இடம் பாலைவனமாய் மாறி நிற்கும்.

காவேரியில் தண்ணீர் ஓடுவது என்பதே கர்நாடகாக்காரன் ஏதோ மனசு வைத்து போனா போவுதே என்று பிச்சை போட்டால்தான் உண்டு.அப்படியிருக்க இத்திட்டத்திற்கான தண்ணீரை காவிரியிலிருந்து மட்டுமே எடுப்போம் என்று சொல்லுவதெல்லாம் பணம் சம்பாரிக்க வேண்டி இந்த தனியார் நிறுவனங்களும்,அரசும் நடத்தும் பித்தலாட்டமேயன்றி வேறேதும் இல்லை.

இப்படி ஒட்டுமொத்த நிலத்தடி நீரையும் உறிஞ்சிவிட்டால்,வெற்றிடம் ஏற்பட்டு,கடல்நீர் உட்புக ஆரம்பிக்கும்.அதோடு மட்டுமில்லாமல் இதற்காக பூமியில் செலுத்தபடும் நச்சு தன்மையுள்ள வேதிபொருட்கள் தொடர்ந்து மண்ணை மலடாக்கி விவசாயம் மட்டுமல்ல,வேறெந்த சிறு புல்பூண்டும் முளைக்காத பொட்டல்காடாய் மாற்றிவிடும்!இந்த நச்சுபொருட்கள் காற்றில் கலந்து சுவாச மண்டலத்தை நச்சு மண்டலமாக்கிவிடும்.அதன்பின் என்ன?மீத்தேனை சுவாசித்து,மீத்தேனை குடித்து,மீத்தேனை உண்டு சாவதை தவிர தமிழனுக்கு வேறு வழியில்லை.

ஒருபக்கம் கூடங்குளம்,மறுபக்கம் மீத்தேன்..இப்படி ஆளும் அரசு எதை சோதனை செய்து பார்க்க நினைத்தாலும்..அதன் தொடக்கம் என்னவோ தமிழ்நாடு தான்.ஏற்கனவே இந்த திட்டம் ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.இன்னுமும் தமிழ் சமூகம்,தமிழ்நாட்டில் ஏதோ ஒரு மூலையில் நடக்கும் விசயம்தானே,நமக்கென்ன வந்தது என வழக்கமான அலட்சியத்தோடு தூங்கி கிடந்தால்..இந்த இடம் சுடுகாடாய் மாறி நிற்கும்..பிறகேது நமக்கு விழிப்பு?நிரந்தர தூக்கம் தான்.

கூடங்குளம் கட்டுமான பணிகள் முடிந்தபின்,அதற்கெதிரான போராட்டங்கள் வலுத்தன.ஆனாலும் அம்மக்களின் அழுகுரல் சிறிதும் ஆளும்வர்க்கத்தின் காதுகளுக்கு எட்டவில்லை.அவர்கள் அப்படித்தான்.நாம் தான் இனி எச்சரிக்கையாய் இருக்கவேண்டும்.தொடங்கிய திட்டங்கள் இனி வளரவிடாமல் போராடி தடுக்கவேண்டியது நம் கடமை.

நான் இப்போ என்ன செய்யணும்?என்ற கேள்வி இப்போது உங்களில் யாருக்கேனும் மிச்சமிருந்தால்,அல்லது எனக்கு கிடைத்த இந்த இயற்கை தந்த காற்றையும்.தண்ணீரையும் காப்பாற்றி என் அடுத்த தலைமுறைக்கு தருவது என் கடமை என்று நினைத்தீர்களேயானால்..நீங்கள் செய்யவேண்டியது இதுதான்..இப்படி ஒரு திட்டம் செயல்பட போகிறது,அப்படி ஏற்பட்டால் இவ்வளவு பின்விளைவுகள் ஏற்படும் என்பதை ஒவ்வொரு தமிழனிடமும் எடுத்து செல்லவேண்டும்.திரைப்படத்தில் மக்களை காப்பாற்றும் ஆபத்பாந்தவனாய் வரும் எந்த நாயகனும் நிஜத்தில் ஒருபோதும் வரப்போவதில்லை.அதனால் நம் பிரச்சனைகளை தீர்க்க நாம் தான் போராடவேண்டும்.

இணையத்தில் சொல்வதால்/எழுதுவதால்  என்ன ஆகிவிடப்போகிறது..என்றெல்லாம் எண்ணுவதை விடுங்கள்.மிகப்பெரிய காட்டுத்தீ ஒரு சிறு நெருப்பு பொறியிலிருந்து தான் உருவாகிறது.அதனால் முடிந்தவரை இதை பகிருங்கள்/விழிப்புணர்வு ஏற்படுத்துங்கள்..நம்மால் முடிந்ததை செய்வோம்.நிச்சயம் முடியும் என்று செய்வோம்.


கடைசியாய்..
இத்திட்டத்தை எதிர்த்து குரல் கொடுப்பது தான்,வாழ்நாள் முழுக்க மண்ணுக்காகவே வாழ்ந்து மண்ணிலே விதையான இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாருக்குநாம் செலுத்தும் குறைந்தபட்ச மரியாதையாய் இருக்கும்.

நன்றி: மே17 இயக்கம்
படங்கள் : கூகுள் இமேஜஸ்

செவ்வாய், 18 நவம்பர், 2014

லிங்கா பாடல்கள்-ஒரு பார்வை

வணக்கம் மக்கழ்ழே....

நீஈஈஈஈண்ட இடைவேளைக்கு அப்புறமா (ஏதோ கலெக்டர் எக்ஸாமுக்கு ப்ரிபேர் பண்ண போன மாதிரியே ஒரு பில்டப்பா இருக்குல்ல..ஆனா அப்படியெல்லாம் ஒண்ணுமில்ல..சோம்பேறித்தனம் தான் எழுதாததுக்கு காரணம்னு சொல்லி தெரியவேண்டியதில்ல:( // தலைவர் படம் சாங்க்ஸ் ரிலீஸ் ஆனதை சாக்கா வச்சி ரீ என்ட்ரி போட்டாச்சு!!

Most awaited album of the year-ஆன (எல்லா  படத்துக்கும் இதையேதானடா சொல்றீங்க?! ) லிங்கா பாட்டு ரிலீஸ் ஆகி இருபத்திநாலு மணிநேரத்துக்கு மேலாச்சு..உச்சபட்ச எதிர்ப்பார்ப்பை பூர்த்தி செஞ்சிருக்காரா ஏ.ஆர்.ஆர்.ன்னு இப்ப பாத்துரலாம்...


ஓ..நண்பா..:

வழவழன்னு இழுக்காம...ஆல்பத்துல மொத்தம் அஞ்சே பாட்டு தான்..அதுல ஓ..நண்பா தான் ஓபனிங் சாங்..வழக்கம்போல சென்டிமென்ட்டை மாத்தாம இதுலயும் எஸ்.பி.பி தான் பாடியிருக்கார்.வழக்கமான ஓபனிங் சாங் மாதிரிதான் இதுவும்...ரகுமானும் ரொம்ப மெனக்கடாம ஒரு பாஸ்ட் பீட் சாங் போடனுமேன்னு  போட்ட மாதிரி இருக்கு..வைரமுத்து, ரஜினி மூலமா ரசிக நண்பர்களுக்கு பல மெசேஜ் சொல்லியிருக்காரு..மத்தபடி Nothing Special.

என் மன்னவா..:

ப்ரி லூட் முடிஞ்சி..சின்ன சின்ன நட்சத்திரம் பறிக்க வந்தாய் ன்னு ஆரம்பிக்குபோது சும்மா ஜிவ்வுங்குது..'மோக குடமே முத்து வடமே..உந்தன் கச்சை மாங்கனி பந்தி வை ராணி'ன்னு வைரமுத்து இறங்கி அடிச்சிருக்காரு(ஒரு பெரிய மனுஷனுக்கு இப்படியாய்யா லிரிக்ஸ் வைக்கிறது? :) மொத்தத்தில் என் மன்னவா கேக்க கேக்க புடிக்கிற வகை!

இந்தியனே வா :

உணர்ச்சி பொங்குற மாதிரி (அதான் இந்த ஒத்த பாட்டுல முன்னுக்கு வருவாங்கல்ல?!) சிச்சுவேஷன்ல வர்ற சாங் இது..ரஹ்மானே இந்த பாட்டை பாடியிருக்காரு..தண்ணீர் இல்லாமல் மனிதன் கிடையாதுன்னு ஹம்மிங்கோட ஆரம்பிச்சு அப்படியே போயி.....சேர்வோமா?னு அவர் ஹைபிச்ல பாடும்போது ரியலி Goosebumps.இந்த பாட்டுக்கு ஹிட்லிஸ்டில் இடமுண்டு:)

மோனா..கேஸலினா..:

Yes..Here Once again Rahman proved..#whyrahmanisgod :) பாட்டு ஆரம்பத்துலயே சும்மா அதகளம் தான்..மனோவோட உற்சாக குரல்ல ஆரம்பிக்கிற பாட்டு கடைசிவரைக்கும் அதே டெம்போவோட போகுது.கார்க்கியோட எளிதாய் ஈர்க்ககூடிய வார்த்தை தேர்வுகள் அபாரம்..பாட்டு இன்ஸ்டன்ட் ஹிட் ஆகிரும்..Mona Mona -Song of the Album

உண்மை ஒருநாள் வெல்லும்:

இன்னும் ஒரு 'விடுகதையா இந்த வாழ்க்கை!!'டைப் பாட்டு..எளிமையான மெட்டு..பவர்ஃபுல் லிரிக்ஸ்..தியேட்டர்ல உள்ள மொத்த ரசிகர்களும் கண்ணுல தண்ணி வச்சிக்க போறா:)கேக்கலாம் டைப்!

And Finally..

ஆறுமாசத்துல ஒரு படத்தை எடுக்குறதுனா..அதுவும் மெகா பட்ஜெட்,சூப்பர்ஸ்டார் ன்னு பல எதிர்பார்ப்புகளை சமாளிக்க வேண்டிய பிரஷர் ஒருபக்கம்..ஆனாலும் டயத்துல படத்தை முடிச்சிட்டாரு கே.எஸ்.ரவிக்குமார்..ஹேட்ஸ் ஆப் யூ சார்:)ஆனா அந்த அவசரப்படுத்தலின் விளைவு பாடல்கள்ல தெரியிதுன்றது மறுக்கமுடியா உண்மை..இன்னும் கொஞ்சம் அவகாசம் இருந்திருந்தா..பாடல்கள் இன்னும் சூப்பரா வந்திருக்கலாம் ..சரி விடுங்க தலைவர் படத்துல பாடல்கள் எல்லாம் ரெண்டாம்பட்சம் தான்!இப்போதைக்கு மோனா கேசலினா ரொம்ப புடிச்சிருக்கு..ரஹ்மானை பொருத்தவரைக்கும் கேக்க கேக்க தான் புடிக்கும்னு ஒரு தியரி இருக்கு.ஒருவேளை அது இந்த ஆல்பத்துலயும் தொடரலாம்.lets see.

படம் டிசம்பர் 12 தலைவர்பிறந்தநாள் அன்னைக்கு ரிலீஸ்னு சொல்லியிருக்காங்க..பாப்போம்..டிரைலர் பாத்தாச்சா?சும்மா பிரி பிரின்னு பிரிச்சிக்கார்..





செவ்வாய், 26 ஆகஸ்ட், 2014

திருட்டு வி.சி.டி யும்!குபீர் போராட்ட திரைபிரபலங்களும்!

அது 'பாட்ஷா' வெளியாகிருந்த தருணம்...எங்க ஊரு தியேட்டர் மட்டுமில்ல..ஒட்டுமொத்த தமிழ்நாட்ல உள்ள அத்தனை தியேட்டரிலும் படம் ஹவுஸ்ஃபுல்லா போயிட்டுருந்துச்சு..அப்பதான் கேபிள் டிவி தமிழ்நாட்ல கால் ஊன்றி நிக்க ஆரம்பிசிருந்த நேரம்!படம் ரிலீஸ் ஆகி நாலஞ்சு நாள்லயே கேபிள் டிவில சுடசுட சுட்டு போட்டானுக..இத்தனைக்கும் படம் லோக்கல்லயே ரெண்டு தியேட்டர்ல ஓடிகிட்டு இருந்துச்சி.இந்த விசயம் எப்படியோ ரஜினி ரசிகர் மன்றத்துக்காரங்க காதுக்கு போயி,அவங்க கேபிள் டிவி ஆபீஸ்க்குள்ள பூந்து சிஸ்டம்,ஆண்ட்டனான்னு எல்லாத்தையும் அடிச்சி நொறுக்கி..பெரும் பிரச்சனையாகி போலீஸ் கேஸ் ஆகுற லெவலுக்கு போயிருச்சி.கிட்டத்தட்ட இருபது வருஷம் ஆகப்போகுது..இந்த சினிமாவுக்கும் பைரசஸிக்குமான போராட்டம்!

இத்தனை வருஷத்துல கேசட்...சி.டி யாகி..சி.டி......டி.வி.டி ஆகி இப்போ டோரன்ட் வரைக்கும் வந்துருச்சி.ஆனாலும் இதுக்கு தீர்வு மட்டும் கிடைக்கல..கிடைக்கலன்றத விட,சினிமான்ற மக்களுக்கான ஊடகத்தை அந்த மக்களுக்கு நியாயமா கொண்டு சேக்காத வரைக்கும் இன்னும் இருபது வருஷம் ஆனாலும் இந்த பிரச்சனை தீரவே தீராது!

உடனே நான் திருட்டு வி.சி.டி. ஆதரவா பேசுறேன்னு யாரும் பொங்க ஆரம்பிச்சிர வேண்டாம்.இன்னிக்கு இருக்க நிலமையில ஒரு மிடில்கிளாஸ் குடும்பம் தியேட்டருக்கு போயி படம் பாக்குறதுன்றது ஒரு பெரிய விசயமா,ஒரு ஆடம்பர செலவா மாறிடுச்சி.தியேட்டர்ல முதல் வரிசையோ,கடைசி வரிசையோ எதுவா இருந்தாலும் ஒரே விலைன்னு டிக்கெட்ல மட்டும் சமதர்மத்தை கடைபிடிச்சிட்டு,இன்டர்வெல்ல ஒரு பாப்கார்ன் விலை நூறு ரூபாய்னு விக்கிறானுக!

இதுல உள்ள நுழையறப்பவே ஏர்போர்ட் செக்யூரிட்டி செக்கிங்கையே மிஞ்சிற அளவுக்கு ஒவ்வொரு ஆடியன்ஸையும் செக்கிங் பண்றானுக.ஒரு பாதுகாப்புக்காக தான் இப்படி பண்றாங்கன்னு நினைச்சா நம்மளை மாதிரி ஒரு லூசுக்கூ......முட்டை யாரும் இருக்கமுடியாது.இவனுக பண்ற செக்கிங் எல்லாம்,தண்ணிபாட்டிலை எவனும் உள்ள கொண்டு வந்துறக்கூடாது,ஸ்நாக்ஸை எவனும் உள்ள எடுத்துட்டு வந்திடகூடாதுன்றதுக்கு தான்!பின்னே,அதையெல்லாம் நாம வெளிலலருந்து கொண்டு போய்ட்டா அப்புறம் இவனுக கேண்டீன் பிஸ்னஸ்ல ஒண்ணுக்கு மூணுன்னு லாபம் வச்சி சாதாரண மக்களை கொள்ளை அடிக்கமுடியாதுல்ல?!

இன்டர்வெல்ல சீட்டை விட்டு எந்திருச்சி வெளில வர்றவன்,ஒரு காபி விலை அறுபது ரூவான்னு தெரிஞ்சதும்,ஒண்ணுக்க மட்டும் இருந்துட்டு மறுபடி சீட்ல போயி உக்கந்துக்கிறான்.இதுதான் நிதர்சனம்.இது பத்தாதுன்னு பார்கிங்ன்ற பேர்ல நடக்குற கொள்ளைய பத்தி சொல்லனும்னா நான் இன்னும் விடியவிடிய ஒக்காந்து டைப் பண்ணனும்.பார்கிங்ல கொள்ளை அடிக்கிறதுக்கு மட்டும் டிசைன் டிசைனா யோசிக்கிரானுக.இப்பல்லாம் ஹவர் கணக்குல தான் காசு வாங்குறதே..அது முப்பது ரூபாயிலருந்து அம்பது ரூபாய் வரைக்கும் அவுங்கவுங்க இஷ்டத்துக்கு!

காசு இருக்கவனுக்கு இதெல்லாம் ஒரு பிரச்சினையே இல்ல.ஆனா அன்றாட பிரச்சனைகளிலிருந்து கொஞ்சம் ரிலாக்ஸ் ஆவனும்னு நினைச்சு வர்றவங்களுக்கும்,குடும்பத்தோட கொஞ்சம் நேரம் செலவழிக்கலாமேன்னு வர்றவங்களுக்கும் இங்க நடக்குற கொள்ளையெல்லாம் பாத்தா மறுபடி தியேட்டருக்கு போகனும்ன்ற நினைப்பு ஜென்மத்துக்கும் வராது.

கொஞ்ச நாள் முன்ன வரைக்கும் படம் ரிலீஸ் ஆகி மறுநாளே பிரஸ் மீட் வைக்கிறது தான் ட்ரெண்டு!இப்ப உள்ள ட்ரெண்டு என்னான்னா,படம் ரிலீஸ் டேட் கன்பார்ம் ஆனவுடனயே பிரஸ்ஸை கூப்பிட்டு உக்கார வச்சி,திருட்டு விசிடிக்கு எதிரா அறிக்கை விடனும்..முடிஞ்சா இன்னும் ஒரு ஸ்டெப் மேல போயி,தாங்களே களத்துல இறங்கி திருட்டு விசிடி எந்த பொட்டிகடையில எல்லாம் விக்கிறாய்ங்க அல்லது எந்த கேபிள் டிவியில எல்லாம் புதுப்படம் போடுறாங்கன்னு கண்டுபிடிச்சி நேரா போயி மடக்கி பிடிக்கிறது தான்.அப்புறம் முக்கியமா இந்த மாதிரியான களப்பணியின்(!) போது அவுங்க பண்ற வீரதீர பராக்ரமங்களை எல்லாம் பதிவு பண்ண கேமராவை தூக்கிட்டு கூடவே ஒரு ஆளு போகணும்.அப்பதானே அதை யூடூப்ல அப்லோட் பண்ணி படத்துக்கு இன்னும் பப்ளிசிட்டி பண்ணலாம்!

தான் படம் ரிலீஸ் ஆவுறப்ப மட்டும் இப்படி திடீர் சமூகப்போராளியா மாறி,பொங்கி போராட்டம் நடத்தி,அநீதிக்கு எதிரா குரல் குடுக்குற இந்த பிரபலங்கள்,அவுங்க படம் ரிலீஸுப்ப முதநாளே க்யூவுல நின்னு டிக்கெட் எடுத்து படம் பாத்து வெளில வர்றப்ப மொத்த பர்ஸையும் வழிச்சி குடுத்துட்டு வயிறெஞ்சிகிட்டே வீட்டுக்குபோறானே,அவனுக்காகவும் கொஞ்சம் குரல் குடுக்குலாமே?!

சினிமான்றது மக்களுக்கானது.அதை நியாயமா,அவனை சந்தோசப்படுத்துற வகையில அவன்கிட்ட கொண்டுபோயி சேத்தா அவன் ஏன் திருட்டுத்தனமா பாக்கபோறான்?!குற்றஉணர்ச்சியோட/மட்டமான தரத்தில உள்ள பிரிண்ட்டை பாக்கணும்னு அவனுக்கு மட்டும் ஆசையா என்ன?

திரும்ப திரும்ப சொல்றதெல்லாம் ஒண்ணுதான்.ஆடியன்ஸ்-ங்குறவன் தங்கமுட்டை போடுற வாத்து மாதிரி!(வாத்துன்றது அசூயையா இருந்தாலும் ஒரு வகையில அது பொருத்தம் தான்)..சினிமாக்காரங்களே,உங்க சுய லாபத்துக்காகவும்,பேராசைக்காகவும் ஒரேஅடியா அவனை கொன்றாதீங்க!அப்புறம் நட்டம் உங்களுக்குத்தான்!

ஞாயிறு, 22 ஜூன், 2014

ஒரு விஜய் ரசிகனின்(முன்னாள்) கண்ணீர் கதை!

இந்த பதிவு யார் மனதையும் புண்படுத்தும் நோக்கில் எழுதப்பட்டதல்ல.மீறி யார் மனதேனும் புண்படுமேனால்,அதற்கு கம்பெனி 'ஒண்ணியும் பண்ணமுடியாது' என சொல்லிக்கொள்கிறது.
#################

கி.பி.1992 டிசம்பர் 4 -அன்றையதினம் உதித்த சூரியனுக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை தமிழ்சினிமாவில்,ஏன் உலகசினிமாவிலேயே(!) தன்னைப்போல ஒளிவீசப்போகிற ஒரு நாயகன் உதயமாகப்போகிறான் என்று!பேரொளி கொண்டு நுரைபொங்க கரை தொட்ட அலைகளுக்கு தெரிந்திருக்கவில்லை,இவன்தான் இன்னும் இருபது ஆண்டுகளுக்கு பின் தமிழ்சினிமா எனும் கடலில் மாபெரும் அலையாய் மக்கள் மனதில் வீசப்போகிறான் என்று ! (கொஞ்சம் ஓவராத்தான் போறோமோ..போவோம்..போயித்தான் பாப்போமே!)..இவ்வளவு ஏன் அந்த நடிகருக்கே அப்போது தெரிந்திருக்காது..இந்த கருமமெல்லாம் நடக்கப்போகிறது என்று!!ஆனால் இதத்தனையும் நடந்தது.அன்று தான்,இத்தனை பெருமைக்குக்கும் சொந்தக்காரரான..அவரின் ரசிகர்களால் 'விஜய் அண்ணா' என்று அன்போடு அழைக்கப்படும் சாட்ஷாத் இளையதளபதி விஜய் அவர்களின் முதல் படம்  'நாளைய தீர்ப்பு' ரிலீஸ் ஆனது!


இந்த இன்ட்ரோ-வுக்காக பயங்கரமா மெனக்கெட்டாலும் ரிசல்ட் என்னவோ அவர் பட ஓபனிங்சாங் போலவே சற்றே டொங்கலாய் அமைந்திருப்பது காலாம் செய்த கோலம்!ஆரம்ப காலத்தில் எஸ்.ஏ.சியும்,சங்கவியும் அவரின் திரை வாழ்க்கைக்கு அஸ்திவாரம் போட்டாலும் அவருக்கென்று ஒரு அடையாளம் கிடைத்தது பூவே உனக்காக திரைப்படத்திற்கு பின் தான்..யோசித்து பார்த்தால் அந்த காலத்தில் இருந்து இன்று வரை விஜய்க்கு எதிரி வேறு எங்கும் இல்லை.அவர் வீட்டுக்குள்ளயே அப்பா என்ற பெயரில் இருந்திருக்கிறார்.

கில்லி படத்தில் விஜய்க்கு கிடைத்த மாஸ் ஹீரோ அந்தஸ்திற்கு பின் அவருக்கென ஒரு ரசிகர் கூட்டம் உருவாகியிருந்தது.அதன்பிறகு திருப்பாச்சி,சிவகாசி,போக்கிரி என விஜய் தொட்டதெல்லாம் ஹிட் தான்.தொடர்ச்சியாய் இரண்டு படம் ஹிட்டடித்த்தும் நம்ம நடிகர்களுக்கு வரும் அரசியல் ஆசையும்,முதல்வர் நாற்காலி கனவும் விஜயையும் விட்டு வைக்கவில்லை.ஆரம்ப நாட்களில் தன்னை ஒரு தீவிர ரஜினி ரசிகனாக அடையாளபடுத்திகொண்ட விஜய்..அரசியல் ஆசை துளிர் விட்டதும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் ரசிகனாய் காட்டிகொண்டார்..மக்கள் திலகத்தின் பெயரை உச்சரித்தால் தான் தமிழ்நாட்டில் அரசியல் செய்யமுடியும் என்ற தீர்க்கதரிசனம் அன்னாருக்கு அந்த சிறுவயதிலேயே இருந்தது ஆச்சரியம்தான்!

சொல்லப்போனால் இங்கு ஆரம்பித்தது விஜய் ரசிகனுக்கு கண்டம். குருவி வில்லு சுறா வேட்டைக்காரன் என எத்தனை எத்தனை கண்டங்கள்..இந்த காலக்கட்டத்தில் தான் ஒவ்வொரு விஜய் ரசிகனும் எப்படி வலிக்காத மாதிரியே நடிக்கிறது என்பதை கற்றுக்கொள்ள ஆரம்பித்திருந்தான்..விஜய் ரசிகன்னு தெரிஞ்சா போதும் ரோட்ல சும்மா போறவன்கூட கூப்ட்டு வச்சி அடிக்க ஆரம்பிச்சானுக.இதுல உச்சபட்ச கொடுமை என்னன்னா  ராமராஜன் ஃபேன்ஸ்ல்லாம் எங்களை புடிச்சி வச்சி கலாய்ச்சானுக..ஆனா ஒண்ணுடா உங்ககிட்ட அந்த மாதிரி அடிவாங்குனதுக்கு அப்புறம் வேற எவன் அடிச்சாலும் தாங்கிக்குற சக்தி எங்களுக்கு வந்துருச்சிடா..சுறா படத்துல தியேட்டர்குள்ள மாட்டிகிட்டு கத்தி கதறி,சிக்கி சீரழிஞ்ச பின் எனக்குள் இருந்த விஜய் ரசிகன் பாதி காணாமல் போயிருந்தான்..மிச்சமிருந்த கொஞ்சமும் அரசியல் பிரவேசத்திற்காக அவர் செய்த செயல்களிலும்..சுயநலத்திற்காக அவர் அடித்த பல்ட்டிகளிலும் மொத்தமாய் காணாமல் போனது.

ஒருவழியாய் தொடர் தோல்விகளுக்கு பின் மீண்டெழுந்து காவலன்,நண்பன்,துப்பக்கின்னு ஹிட்டடிக்க ஆரம்பிச்சதுல விஜயை விடவும் அதிகம் சந்தோசப்பட்டது அவரின்  ரசிகர்கள் தான்..ஆனா விதி தான் வலியது ஆச்சே..ரெண்டு படம் ஹிட்டானதும் அண்ணனுக்கு மீண்டும் அதே அரசியல் ஆசை முதல்வர் நாற்காலி கனவு..இந்த முறை ஒரு படி அதிகம் போய் தனது அடுத்த படத்திற்கு 'தலைவா' என பெயர் வைத்து 'டைம் டூ லீட்' என சப்டைட்டிலும் வைத்தாயிற்று.இதற்கு இடையில் விஜயின் அப்பா வேறு, 'நான் அண்ணா,என் மகன் எம்.ஜி.ஆர்' என்று உச்சபட்சமாய் உளறி வைத்தார்..இப்போது புரிகிறதா வில்லன் வீட்டிலேயே இருக்கிறார் என நான் ஏன் சொன்னேன் என்று! இது  போதாதா?!ஆட்சியாளர்களின் கடும் கோபத்திற்கு ஆளாகி தலைவா ரிலீஸில் பெரும் சர்ச்சை ஏற்பட்டது..ஒருவழியாய் மன்னிப்பு கேட்டு சர்ச்சைகள் எல்லாம் முடிந்து படம் தியேட்டரில் வெளிவருவதற்கு முன்னே டிவிடி களிலும்,இணையத்திலும் வெளியாகிவிட்டது..டோரன்ட்டில் படம் பார்த்துவிட்டு அதற்கு நம்மவர்கள் ஃபர்ஸ்ட்  ஆன் நெட் விமர்சனமெல்லாம் எழுதியது வரலாறு..

இதெற்கெல்லாம் சிகரம் வைத்தது போல் ஒரு சம்பவம் விஜய் அவர்களின் மீதிருந்த மொத்த மதிப்பையும் குலைப்பதாய் இருந்தது..அது,2011 ல் நாகபட்டினத்தில்  இலங்கை அரசால் தண்டிக்கப்படுவதை  எதிர்த்து விஜய் மற்றும் அவர் ரசிககளால் கண்டன பொதுக்கூட்டம்..அந்த கூட்டத்தில் விஜய் பேசியது தான் ஹைலைட்..இலங்கை அரசை பார்த்து 'நான் அடிச்சா தாங்க மாட்டே நாலு நாளு தூங்க மாட்டே' என ஒரு பஞ்ச அடித்தார் பாருங்கள்..வாழ்க்கையே வெறுத்து விட்டது.அது எத்தனை முக்கியமான விசயம்..எத்தனை மீனவர்களின் வாழ்வாதார பிரச்சனை?!அதை எத்தனை நுட்பமாய் கையாளவேண்டும்.அதையெல்லாம் விடுத்து கைதட்டல் வாங்குவதற்காகவு ம்,தன்ரசிகர்களை உசுப்பேத்துவதாகவுமே இருந்தது அந்த பேச்சு முழுவதும்.

அவரு அரசியலுக்கு வந்தா உனக்கு என்னடா பிரச்சனை? என யாரேனும் கேட்பீர்களானால்,இது ஜனநாயக நாடு தான்..யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் தான்..ஆனால் மக்களுக்காக எதுவுமே செய்யாமல் தொடர்ந்து இரண்டு படம் ஹிட்டானதே முதல்வர் பதவிக்கு தகுதியும்,போதுமானதும் என நினைக்கும் மனநிலையே சற்று..இல்லைஇல்லை நிரம்பவே எரிச்சல் தருவதாய் இருக்கிறது.படுத்துக்கொண்டே ஜெயிப்பதற்கு இவர் ஒன்றும் எம்.ஜி.ஆரும் இல்லை..மக்களும் எம்.ஜி.ஆர் காலத்தில் வாழ்ந்தது போல் ஒன்றும் தெரியாதவர்களும் அல்ல...

கடைசியாய் ஒன்று,விஜய் அவர்களே..எத்தனை நெருக்கமான நபராய் இருந்தாலும்..தவறான வழிக்காட்டுதல் என தெரிந்தால்,அதை/அவரை உடனே புறக்கணியுங்கள்.நீங்கள் ஒரு நல்ல கலைஞன்..உங்களால் மற்றவர்களை சந்தோசபடுத்த முடிகிறது.அது ஒரு மாபெரும் வரம்.அதை செவ்வனே செய்யுங்கள்..மற்றவற்றை காலம் தீர்மானிக்கும்!Wish You A Very Happy Birthday IlayaThalabathi!